மதுரையில் பார்க்க வேண்டிய கோவில்கள்...!

மதுரையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் கள்ளழகர் கோவில் உள்ளது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு ஊரே திரண்டு வரும்.

மதுரைக்கு போனால் நம்ம மீனாட்சியை பார்க்காமல் எப்படி? மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அன்னை மீனாட்சிக்கே முதல் பூஜை. ஆயிரங்கால் மண்டபத்தில் 5 இசைத்தூண்களும், பல ஒலிகளைத்தரும் சிலைகளும் உள்ளன.

மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 7 கி.மீ., தூரத்தில் உள்ளது திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோவில். இது முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாகும்.

கள்ளழகர் கோவிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ளது (பழமுதிர்சோலை) சோலைமலை, சுப்பிரமணிய சுவாமி கோவில். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது, ஆறாவது படை வீடாகும்.

மதுரை மேலமாசி வீதியில் உள்ளது இம்மையிலும் நன்மை தருவார் கோயில். இத்தல லிங்கம் மேற்கு பார்த்தவாறு உள்ளது. லிங்கத்துக்கு பின் சிவனும், பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர்.

மதுரை ரயில் நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது கூடலழகர் கோவில். பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு.

மதுரையில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள காளமேகப்பெருமாள் கோவில், திருமோகூர். முன்னோர்களுக்கு முக்தி கிடைக்கவும், செய்யும் செயல்கள் வெற்றி பெறவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம்.