கர்ப்பிணிகளுக்கு உகந்த தண்டு கீரை !

தண்டு கீரையை பொறுத்தவரை, தண்டோடு சேர்த்து சாப்பிடுவதே நல்லது.

முற்றாத இளம் தண்டுக்கீரை சமையலுக்கு சிறந்தது. சிலர் கீரையின் இலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தண்டுகளை குப்பையில் போட்டு விடுவது தவறான ஒன்றாகும்.

இக்கீரையின் தண்டுகளை, மெல்லியதாக வெட்டி பாசிப்பருப்புடன் சேர்த்து, வேக வைத்து கூட்டாகவோ, சாம்பாராகவோ சமைத்து சாப்பிட்டால் நல்ல சுவை கிடைக்கும்.

அல்லது தண்டை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வேகவைத்து, சூப் ஆக குடிக்கலாம். கீரையின் இலைகளை, முளைக்கீரை போன்றும் சாப்பிடலாம்.

இதன் தண்டு உடல் மெலிய சிறந்த மருந்தாகும். சிறுநீர் நன்றாக பிரியும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது.

இக்கீரையை அடிக்கடி சாப்பிட உடல் சூடு குறைந்து கண்கள் பளபளப்பாகும். முதுமையில் ஏற்படும் கால்சியம், இரும்பு சத்து விகித வேறுபாட்டை இது சரிப்படுத்தும்.

கருவுற்ற பெண்கள், தினமும் தண்டுக்கீரையின் சாறு ஒரு கப், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால், பிரசவம் எளிதாக நடக்கும்.

குழந்தையும் நல்ல வளர்ச்சியுடன் காணப்படும். குழந்தைகளின் உடல், எலும்பு, தசை வளர்ச்சிக்கு, கால்சியம் சத்து மிகவும் முக்கியம்.

கால்சியத்தை பல்வேறு உணவுகள் வாயிலாக பெற முடிந்தாலும், தண்டுக்கீரையில் அதிகம் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், 400 மி.கி., இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி கீரையை உணவில் சேர்த்து கொள்ளும்போது, வயிற்றுப்புண், மலச்சிக்கல், வாயு தொல்லை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.