அச்சுறுத்தும் நடு உடல் பருமன்! சில புரிதல்கள்...
நம் நாட்டில், 'ஏசியன் இந்தியன் பினோடைப்' எனப்படும், வயிறு, இடுப்புப் பகுதியைச் சுற்றி அதிக கொழுப்பு சேருவது தான் மிகவும் அதிகம் காணப்படுகிறது.
இதற்கு நடு உடல் பருமன் என்று பெயர். இது நம் நாடு உட்பட ஆசிய மக்களின் மரபணுவிலேயே உள்ளது.
குறைவான உணவு சாப்பிட்டு, அதிக உடல் உழைப்பு செய்யும் விதமாக, மரபணு ரீதியில், நம் உடலமைப்பு உள்ளது. நம் முன்னோர்கள் அப்படித் தான் வாழ்ந்தனர்.
நம்முடைய வாழ்க்கை முறை, 30 ஆண்டுகளில், இதற்கு நேர் எதிராக, அதிக உணவு, குறைந்த உடலுழைப்பு என்று மாறிவிட்டது.
இது இதய ரத்தக்குழாய் நோய்களை விரைவாகத் துாண்டுகிறது. இதனால், ஆசிய நாட்டவருக்கு, 5 - -10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இதய நோய்கள் ஏற்படும் போக்கு அதிகரித்து விட்டது.
ரத்த நாளங்களில் அடைப்போ, உயர் ரத்த அழுத்தமோ இல்லாத நிலையிலும், சர்க்கரை நோயால் இதயத் தசைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, இதயம் பலவீன மடையலாம். இறுதியில் செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு, பாதிப்பு ஏற்படுவதால், 'இஸ்கிமிக்' எனப்படும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் மிக அதிகம் உள்ளது.
கொழுப்பைக் குறைக்க, மாவுச்சத்து உணவுகளைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பயறு வகைகளை அதிகம் சேர்க்கவும்.மேலும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.