பெற்றோரிடம் விலகியிருப்பது கூட மன அழுத்தத்தை தரலாம்!
பெற்றோருக்கும், 'டீன் ஏஜ்' குழந்தைகளுக்கும் இடையிலான பிரச்னைகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
குழந்தை வளர்ப்பில் குறிப்பாக, டீன் ஏஜ் குழந்தைகளை கையாளுவதில் அதிக கவனம் அவசியம். அந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகம் உள்ளது.
படிப்பில் கவனமின்மை, எதிர்த்து பேசி கோபப்படுதல், அதிக நேரம் நண்பர்கள் வட்டத்துடன் செலவழிப்பது, துரித உணவு மட்டுமே விரும்புதல் மற்றும் துாக்கமின்மை போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
மேலும், வீட்டில் அனைவரும் இருந்தும் தனிமையாக உணர்வது, இனம் புரியாத பயம் காரணமாக சில கற்பனை எண்ணங்கள், பெற்றோர் மீது கோபம் போன்றவையும் உண்டாகக்கூடும்.
பதின் பருவ ஹார்மோன் மாற்றங்கள் கூட மன அழுத்தத்தை தரலாம். சரியோ, தவறோ தங்கள் விஷயங்களை தைரியமாக பெற்றோரிடம் பகிர்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
அதிக நேரம் தனிமையில் இருப்பது, எதையோ சிந்திப்பது, கவலையுடன் காணப்பட்டால், வெளியே அழைத்துச் சென்று பிடித்தவற்றை வாங்கி தந்து, அன்பாக பேசினால், குழந்தைகள் மனதில் உள்ளதை சொல்லிவிடுவர்.
தந்தையோ, தாயோ அதீத கண்டிப்பை தவிர்ப்பது முக்கியம். கலகலப்பான குடும்ப சூழல், பிள்ளைகளின் தனிமையை தவிர்க்க உதவும்.
பல வீடுகளில் குழந்தைகள் தாயிடம் மட்டும் வெளிப்படையாகவும், தந்தையிடம் விலகியும் இருப்பர்; இதுவும் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது.
எளிதாக மனமுடைந்து விடாமல், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள அவர்களை பழக்க வேண்டும்.