குழந்தையின் தாகத்தை தணிக்கும் முதல் பால்

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, 41 % பச்சிளங் குழந்தைகளுக்கு மட்டுமே, பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கிடைக்கிறது.

64 % குழந்தைகள் மட்டுமே, 6 மாதங்கள் வரை முழுமையாக தாய்ப்பால் குடிக்கின்றனர்.

தாய்ப்பாலை முதலில் கொடுக்கும்போது, முதலில் வெளிவரும் பாலை, முதல் பால் அல்லது சீம்பால் என்றும், இறுதியில் சுரப்பது பின்பால் எனவும் சொல்வர்.

முன்பாலில் அதிகளவு நீர், புரதம், லாக்டோஸ், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. முன்பாலில் அதிகளவு நீர் உள்ளதால், குழந்தையின் தாகத்தை தணிக்கும்.

பின்பாலில், கொழுப்பு உள்ளதால், சக்தி, பசியாறிய நிறைவை தரும். எனவே, ஒரு மார்பகத்திலுள்ள தாய்ப்பாலை முழுமையாகக் கொடுத்து பிறகே, அடுத்த மார்பகத்தில் தாய்ப்பால் தர வேண்டும்.

குழந்தை அழுத பிறகு மட்டுமே தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்பதில்லை. குழந்தை பசியிலிருப்பதை சில சமிக்ஞைகள் மூலம் அறியலாம்.

வாயை அகலமாகத் திறக்கும், தலையை ஒரு பக்கமாகத் திருப்பி தாயின் மார்பகத்தைத் தேடும்; பசி அதிகமானால், கைகளை விரிக்கும்; உடல் அசைவுகளை அதிகரிக்கும்.

கையை, வாயை நோக்கிக் கொண்டு செல்லும்; இறுதியாகத் தான் அழ ஆரம்பிக்கும். குழந்தை பசியிலிருப்பதை ஆரம்ப சமிக்ஞைகளிலே அறிந்து கொண்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

இந்த சமிக்ஞைகள் எதுவும் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக 2 - 3 மணிநேரத்திற்கு ஒரு முறை குழந்தையை எழுப்பி, தாய்ப்பால் தர வேண்டும்.

தாய்ப்பால் சுரப்பிற்கு புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. தாயின் உணர்வுகள், ஆக்ஸிடோசின் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

எனவே, கவலை, மன அழுத்தம், வலி மற்றும் நம்பிக்கையின்மை போன்ற எதிர்மறை உணர்வுகளால், பால் சுரப்பது குறையலாம்.

புரோலாக்டின் ஹார்மோன் இரவு நேரத்தில் அதிகம் சுரக்கும். இரவு நேரத்தில் தாய்ப்பால் தருவது அவசியம். இரண்டு வருடங்கள் வரையாவது தாய்ப்பாலை தொடர வேண்டும்.

மருத்துவர் அறிவுறுத்தல் இருந்தால் மட்டுமே பவுடர் பால் தர வேண்டும். பிரிட்ஜில் 4 நாட்கள் வரையும், வெளியே இருந்தால் 4 மணி நேரம் வரையும் சேகரித்த தாய்ப்பாலை பயன்படுத்தலாம்.