உலகின் மகிழ்ச்சியான நாடுகள்... இந்தியாவுக்கு எந்த இடம்?

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது மிக முக்கியமானது. இது இருந்தால் மட்டுமே பல சாதனைகளை படைத்து முன்னேற்ற பாதையில் செல்ல முடியும் என்பது எல்லோரும் அறிந்ததே.

ஆக்ஸ்போர்டு பல்கலையின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், 2026ம் ஆண்டில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கைத்தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதில், அதிகபட்ச புள்ளிகள் 10 என்றால், 7.76 புள்ளிகளுடன் உலகின் மகிழ்ச்சியான நாடு என பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 9வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் பட்டியலில் இந்தியா 116வது இடத்திலுள்ளது. கடந்தாண்டில் 118வது இடத்திலிருந்த நிலையில், நடப்பாண்டில் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.

அதேபோல், உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளில் டாப் 10 பட்டியலில், ஆப்கானிஸ்தான், மலாவி, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெபனான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.