ஆர்ப்பரிக்கும் கடலில் பீறிடும் கிணறு!
அமெரிக்காவின் ஓரிகானில் யச்சாட்சுக்கு தெற்கே 5 கி.மீ., தொலைவில் கேப் பெர்பெட்டுவா பகுதியில் உள்ள் கடற்கரையில் தோர்ஸ் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணறு கரடுமுரடான பாறைகளை கொண்ட கடற்கரையில் ஒரு கிண்ண வடிவ துளைபோல் காட்சியளிக்கிறது.
முந்தைய காலத்தில் இது ஒரு கடற்கரை குகையாக இருந்தது. அதன் கூரை இடிந்து விழுந்த பின்னர், கடல் அலைகள் இந்த துளைக்குள் தண்ணீரை கொண்டு நிரப்ப தொடங்கியது.
இதுபோன்று கடலில் இருந்து தண்ணீர் தொடர்ந்து இந்த கிணறுக்குள் நிரம்பிக் கொண்டே உள்ளது. ஆனால் இதில் நிரம்பும் தண்ணீர் எங்கு செல்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இந்த பெரிய துளை சுமார் 20 அடி ஆழம் மட்டுமே உள்ளது. மர்மமாக புகழ் பெற்றிருந்தாலும் தோர்ஸ் கிணறு அவ்வளவு ஆபத்தானது அல்ல என சொல்லப்படுகிறது.
சாகசம் விரும்பும் சுற்றுலா பயணிகள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் இங்கு அதிகம் பார்வையிட வருகின்றனர். அலையின் வேகம் குறையும்போது கிணற்றைப் பார்க்க சிறந்த நேரமாக உள்ளது.