டாப்சிலிப்பில் யானைப் பொங்கல் கோலாகலம்

வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மக்களிடையே விளக்கும் வகையில், ஆண்டுதோறும் கோவை மாவட்டம் டாப்சிலிப்பில், யானைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு, கோழிகமுத்தி யானைகள் முகாமில் நடந்த விழாவில், அலங்கரிக்கப்பட்ட யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டன. கஜ பூஜைக்கு பின் விநாயகப்பெருமானை, யானைகள் வழிபாடு செய்து வணங்கின.

தொடர்ந்து, பழங்குடியின மக்கள், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். விழாவை, ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

தொடர்ந்து, அனைத்து யானைகளுக்கும் பொங்கலுடன் கரும்பு, தேங்காய் மற்றும் பழவகைகள் வழங்கப்பட்டன.

பொங்கல் விழா என்றால், எல்லோருக்கும் கலீம் தான் நினைவுக்கு வரும்; கம்பீரமாக நிற்கும் அந்த யானையின் அழகைக் காண, அதிகளவு மக்கள் வந்து செல்வர்.

இந்நிலையில், காட்டு யானையை பிடிக்கச் சென்றதால், விழாவில் கலீம் யானை பங்கேற்கவில்லை. இதனால், ஆர்வமாக வந்த மக்கள், 'கலீம் இல்லையா?' என ஏக்கமாக விசாரித்தனர்.