ஜி.பி.எஸ்., பாதிப்பை உண்டாக்கும் முறையாக சமைக்காத இறைச்சி!
'முறையாக சமைக்காத இறைச்சி, பாலில் இருக்கும், 'கேம்பை லோபாக்டர் ஜெஜுனி' பாக்டீரியா, 'கிலன் பா சிண்ட்ரோம்' நோயை ஏற்படுத்தும்' என டாக்டர்கள் எச்சரிகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில், கிலன் பா சிண்ட்ரோம் (ஜி.பி.எஸ்.,)என்ற நரம்பு வாத நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்திலும், இப்பாதிப்பு ஒரு சிலருக்கு உள்ளது.
ஜி.பி.எஸ்., நோய் பாதிப்பு ஏற்படுத்தும், 'கேம்பை லோபாக்டர் ஜெஜுனி' பாக்டீரியா, நீர், உணவு உள்ளிட்டவையில் காணப்படுவதால், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்த பாக்டீரியா, முறையாக சமைக்கப்படாத இறைச்சி, காய்ச்சப்படாத பால் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறது.
மாமிசத்தை, 70 டிகிரி செல்ஷியசுக்கு, வேக வைப்பது அவசியம். சாப்பிடும் முன் கைகளை கழுவ வேண்டும். இறைச்சிகள் சாப்பிடும்போது, சூடாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பாதுகாப்பற்ற நீரை பருக வேண்டாம். பாதுகாப்பற்ற நீரில் செய்யப்பட்ட, ஐஸ் கட்டிகள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது அவசியம்.