நாட்டின் சிறந்த தேசிய பூங்காவான இரவிகுளத்துக்கு ஒரு விசிட் செய்யலாமா?
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற
அமைச்சகம் சார்பிலான நிபுணர் குழு, வனப்பகுதிகளில் 2020 - 25 வரை ஆய்வு
நடத்தினர். நாட்டில் 438 இடங்களில், பல கட்டங்களாக ஆய்வு நடந்தன.
அதில்,
மூணாறு அருகேயுள்ள இரவிகுளம் தேசிய பூங்கா, ஜம்மு - காஷ்மீரிலுள்ள
டாச்சிகம் தேசிய பூங்கா ஆகியவை, தலா 92.97 % மதிப்பெண்கள் பெற்று சிறந்த
தேசிய பூங்காக்களாக தேர்வு செய்யப்பட்டன.
கேரளா மூணாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு மலைகளில், இரவிகுளம் தேசிய பூங்கா 97 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டது.
உலகில் அதிக எண்ணிக்கையில் வரையாடுகள் உள்ள பகுதியான இப்பூங்கா, உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் சுற்றுச்சூழல் சுற்றுலாவில் முன்மாதிரியாக உள்ளது.
இது 1975ல் வனவிலங்கு சரணாலயமாகவும்; 1978ல் மாநிலத்தில்
முதல் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது, பொன்விழா
கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.
அழிந்து வரும்
பட்டியலில் இடம் பெற்றுள்ள வரையாடு , யானை, சிங்கவால் குரங்கு, புலி,
சிறுத்தை, காட்டு மாடு உட்பட பல்வேறு வனவிலங்குகள் இங்குள்ளன.
140 வகை பறவைகள், 100க்கும் மேற்பட்ட வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.
தென்னிந்தியாவின் மிகவும் உயரமான ஆனமுடி சிகரம் (8842 அடி) இந்த பூங்காவில் உள்ளது.
பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலை பகுதிக்கு மட்டும் வரையாடுகளை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.