டீ, காபி... கொதிக்க கொதிக்க குடிப்பதால் என்னவாகும்?

டீ, காபி உடலுக்கு ஆபத்தானது கிடையாது. ஆனால், அவற்றை அவற்றை மிகவும் கொதிக்கும் சூட்டில் குடிப்பதுதான் பிரச்னை.

தொடர்ந்து சூடான பானங்களை குடிக்கும்போது, வாய், உணவுக்குழாயின் உள் சுவரில் மீண்டும் மீண்டும் வெப்பக்காயம் ஏற்படுகிறது. தினமும் தொடர்ந்தால், நீண்டகாலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

டபிள்யூ.எச்.ஓ.,வின் ஐ.ஏ.ஆர்.சி., அமைப்பு, 65 டிகிரிக்கு மேல் வெப்பநிலையில் அருந்தப்படும் பானங்கள் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை என வகைப்படுத்தியுள்ளது.

அதாவது டீ, காபியால் புற்றுநோய் வராது; மாறாக, அதிக வெப்பத்தால் உணவுக்குழாயில் ஏற்படும் தொடர் சேதம் இதற்கு காரணம்.

மிக சூடான டீ, காபியை குடிக்கும் போது, உதடு, வாய் மற்றும் நாக்கில் எரிச்சல், தொண்டை வலி அல்லது எரிச்சல், உணவுக்குழாய் உள் சுவரில் பாதிப்பு போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.

குறிப்பாக, ஒரு பானத்தை குடிக்கும்போது தொண்டையில் எரியும் உணர்வு அல்லது வலி ஏற்பட்டால், அது மிகவும் சூடாகவுள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறி.

சில ஆய்வுகள், தொடர்ந்து அதிக வெப்பநிலையில் பானங்களை அருந்துபவர்களிடம் உணவுக்குழாய் புற்றுநோய் அபாயம் அதிகமாக இருக்கலாமென காட்டுகின்றன.

ஒரு கப் சூடான டீ குடித்தால் புற்றுநோய் ஏற்படும் என அர்த்தமல்ல. ஆனால், பல ஆண்டுகளாக மிக சூடான பானங்களை அருந்தினால் வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சூடாக அவற்றை கப்பில் ஊற்றியவுடன் குடிக்காமல், சில நிமிடங்கள் ஆறவிட்டு... அதாவது உதடு, தொண்டையில் எவ்வித எரிச்சலும் ஏற்படாத மிதமான வெப்பநிலையில் அருந்தவும்.