போஸ்சுரல் ஹைப்போடென்சன் என்றால் என்ன ?

போஸ்சுரல் ஹைப்போடென்சன் என்பது முதுமை காரணமாக ரத்தக்குழாய்களின் உட்சுவர் தடித்து, சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும் ஒரு நிலை.

உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து மூளைக்குச் செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும்.

குறிப்பாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுந்திருக்கும்போதும், காலையில் படுக்கையிலிருந்து எழும்போது, சாப்பிட்டு முடித்தவுடன், சிறுநீர், மலம் கழித்த பின் என, பல சூழல்களில் மயக்கம் வரும்.

இதைத் தவிர்க்க, கட்டிலின் தலைப்பகுதியை அரையடி உயர்த்திக் கொள்ளலாம்.

தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்காருவதையும் தவிர்ப்பது நல்லது.

சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பி மெதுவாக எழவேண்டும்.

ஒரே வேளையில் வயிறு முட்ட சாப்பிடுவதைவிட அரை வயிறு நிரம்பும் வகையில் அடிக்கடி சாப்பிட வேண்டும்.

சிறுநீர், மலம் கழிக்கும்போது முக்கக்கூடாது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால்களில் 'எலாஸ்டிக் ஸ்டாக்கிங்ஸ்' மீளுறைகளை அணிய வேண்டும்.