இன்றைய குழந்தைகளுக்கு தேவை மீண்டெழுந்து நிற்கும் மனவலிமை
இன்றைய நவீன யுகத்தில் பெரியோர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் பாதிக்கிறது மன அழுத்தம்.
தேர்வில் குறைந்த மதிப்பெண், நண்பனிடம் இருப்பது தன்னிடம் இல்லாத ஏக்கம், பெற்றோரின் கண்டிப்பு, நினைத்தது உடனே நடக்காத ஏமாற்றம் போன்றவை காரணமாக உள்ளன.
சிறிய ஏமாற்றங்கள் கூட, குழந்தைகளுக்கு மிகப்பெரிய தோல்வியாகத் தோன்றலாம். அவர்களின் திறமையை மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்கக் கூடாதென்பது டாக்டர்களின் அட்வைஸ்.
ஒரு குழந்தை படிப்பில் சராசரியாக இருந்தாலும், பிற துறைகளில் பட்டையை கிளப்பலாம். மதிப்பெண் குறைந்தவுடன் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது தன்னம்பிக்கையைப் பாதிக்கும்.
'நீ தேர்வில் தோல்வியடையலாம்; ஆனால் நீயே ஒரு தோல்வி அல்ல' என்ற புரிதலை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும்.
குழந்தைகள் தங்கள் பிரச்னைகளைப் பகிரும்போது, 'உனக்கென்ன தெரியும்?' என நிராகரிக்காமல், அவர்களின் பேச்சை பொறுமையாகக் கேட்க வேண்டும்.
தவறு செய்தால், 'என்ன நடந்தது?', 'உனக்கு எப்படி இருந்தது?', 'இதிலிருந்து எப்படி வெளியே வரலாம்?' என அவர்களுடன் இணைந்து பேச வேண்டும்.
பெற்றோரிடம் எதையும் தயக்கமின்றிப் பகிரலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த இந்த அணுகுமுறை உதவும்.
குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, அவர்களின் பேச்சைக் கேட்பது, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது முக்கியம்.
போதிய தூக்கம், விளையாட்டு, பொழுதுபோக்கு, அளவான திரை நேரம் மற்றும் குடும்பத்துடன் பேசும் நேரத்தையும் வழங்க வேண்டும்.
இது தோல்வியடைந்தாலும் மீண்டும் எழுந்து நிற்கக் கற்றுக்கொள்ள உதவும்.
'வாழவே பிடிக்கவில்லை' போன்ற வார்த்தைகளை குழந்தை கூறினால், சாதாரணமாக விடாமல், உடனடியாக கவனித்து, தேவையானால் மனநல நிபுணரின் உதவியை நாட வேண்டும்.