மாணவர்கள் வீட்டில் அமைதியாக இருப்பதும், தூக்கத்தில் புலம்புவதும் எதனால்?
பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்தவுடன் ஒருசில மாணவர்கள் யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பர், துாக்கத்தில் புலம்புவர்.
இதற்கு பலவிதமான மன ரீதியான, உடல் ரீதியான, சமூக ரீதியான காரணங்கள் இருக்கலாம். கல்வி அழுத்தம், மன உளைச்சல், படிப்புச்சுமையாக இருக்கலாம்.
பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய பின் அன்றைய தினம் நடந்த சங்கடமான உரையாடல்கள், ஆசிரியரின் கண்டிப்பு அல்லது தோல்விகள் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கலாம்.
இது துாக்கத்தில் புலம்பலுக்கு வழிவகுக்கும்.
சம வயதுடையோரின் நிராகரிப்பு, நண்பர்களிடையே ஏற்படும் சண்டைகள், ஏளனம், அல்லது தன்னைப் புறக்கணிப்பதாக உணருதல் போன்ற பிரச்னைகள் ஆழ்ந்த மனக்கவலையை உருவாக்கும்.
இதிலிருந்து மீண்டு வருவதற்கு பள்ளியை விட்டு வந்தவுடன் சிறிது நேரம் ஓய்வு அல்லது விளையாடுவதற்கான நேரம் ஒதுக்க வேண்டும்.
அதன் பிறகு படிப்பதற்கான நேரத்தை ஒதுக்குவது நல்லது.
இன்று பள்ளி எப்படி இருந்தது என்று கேட்பதற்குப் பதிலாக, 'நீ அமைதியாக இருப்பது தெரிகிறது, ஏதாவது மனதை வருத்துகிறதா. நான் உதவ முடியுமா?' என்று கேட்கலாம்.
எளிய யோகாசனங்களை கற்றுக்கொடுக்கலாம். அதன் மூலம் அவர்களின் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும்.