மைக்ரேன் ஏன் ஏற்படுகிறது?

மைக்ரேன் என்பது சாதாரண தலைவலியில் இருந்து மாறுபட்டது. ஒரு வகையான தலைவலி. ஒற்றை தலைவலி என்பார்கள். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது.

தலையின் ஒரு பக்கம் முழுவதும் கடுமையாக வலிக்கும். அங்கு ரத்த குழாய்களில் ரத்தம் செல்வதையும் கூடுவதையும் குறைவதையும் துல்லியமாக உணர முடியும். சாதாரண தலைவலிக்கான சிகிச்சை இதற்கு பலன் தராது.

மனஅழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், துாக்கமின்மை, உணவு தவிர்ப்பு, காலநிலை மாற்றம், புகைபிடித்தல், அதிக ஒளி, இடைவிடாத சத்தம் ஆகியவை இந்த வகை தலைவலிக்கு தூண்டுதல்கள்.

உரிய நேரத்தில் உணவு சாப்பிடாமல் விடுவது, போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது, ஒரே விஷயத்தை விடாமல் யோசித்து குழப்பிக் கொள்வது போன்ற காரணங்களும் உண்டு.

ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்ப காரணங்களும் மாறுபடும். மாதவிடாய், மெனோபாஸ் சமயங்களில் ஹார்மோன் மாற்றங்களால் பலரும் இதனால் பாதிப்பு உண்டாகிறது.

சிலருக்கு சில மணி நேரம் நீடிக்கும். சிலருக்கு சில நாட்கள் தொடரலாம்.

மைக்ரேன் துவங்கும் முன் சிலருக்கு கண் பார்வை மாறுதல், உடல் பகுதி மரத்துப் போவது, பேசுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும் இதை 'ஆரா' என்பர்.

இதை உடனே உணர்ந்து, என்ன பிரச்னையோ அதை சரி செய்தால் மைக்ரேன் வராமல் தவிர்க்கலாம்.