நீண்ட ஆயுளை தரும் தனிமம்
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு ஜிங்க் மிகவும் அவசியமான ஒன்று என்பது, பல ஆராய்ச்சிகளில் உறுதியான ஒன்று.
குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் என, அனைத்து தரப்பினருக்கும் இந்த நுண்ணுாட்டச் சத்து அவசியமானது.
ஜிங்க் சத்து குறைவால் மத்திய நரம்பு மண்டலம், செரிமான உறுப்புகள், தோல், இனப்பெருக்க உறுப்புகள், எலும்புகளில் குறிப்பிட்ட வகை கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தினசரி உணவில் போதியளவு ஜிங்க் சத்து இருந்தால், டெஸ்டிரோஸ்டிரான் ஹார்மோன் சீராக சுரக்க உதவும். இதனால் ஆரோக்கியமான மனநிலையுடன், சுறுசுறுப்பாக நடமாடலாம்.
'டைப் - 2' நீரிழிவு பாதிப்புக்கு ஜிங்க் குறைபாடும் ஒரு காரணம். உடலில் ஜிங்க் போதியளவு இருந்தால், 'இசட்என்டி8' என்ற எதிர்ப்பணுவைத் துாண்டி, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
'ரோடோப்சின்' என்ற நிறமி குறைபாட்டால், விழித்திரை பாதிக்கப்படுவதால் ஏற்படும் மாலைக்கண் நோயைத் தடுக்கிறது.
தோல் வறட்சி, பருக்கள், முகம், தோலில் ஏற்படும் அனைத்தையும் கட்டுப்படுத்தி, சுருக்கங்கள் இல்லாது பளபளப்பான வைக்க உதவுகிறது.
செரிமான மண்டலத்தில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகவும், ஆரோக்கியமான செரிமானத்திற்கும் ஜிங்க் துணை செய்கிறது.
நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்கும் 'தைமஸ்' சுரப்பியைத் துாண்டி, செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் வயதாவது தாமதமாகிறது.
கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, நட்ஸ், முழு தானியங்கள், விதைகள், மாதுளம் பழம், பீன்ஸ், முட்டை, நண்டு ஆகியவற்றில் ஜிங்க் சத்து அதிகமுள்ளது.