பக்கவிளைவு ஆபத்துகள் காரணமாக 16 வகை கூட்டு மருந்துகளுக்கு தடை

பக்கவிளைவு ஆபத்துகள், மருந்து வேலை செய்யாத நிலை போன்ற காரணங்களால் 16 வகையான கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

ஒரே மாத்திரையில் இரண்டு அல்லது மூன்று மருந்துகளின் மூலப்பொருட்கள் அடங்கியிருப்பவை கூட்டு மருந்துகள் எனப்படும்.

இம்மருந்துகளை, மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் நிபுணர் குழுவினர், அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

ஆய்வில் கூட்டு மருந்துகள், மருத்துவ ரீதியாக பலனிக்கவில்லை மாறாக நோயாளிகளுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் என தெரியவந்தால் அவை தடை செய்யப்படும்.

இந்நிலையில், 16 வகையான கூட்டு மருந்துகளை மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரிய அறிக்கையின் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட கூட்டு மருந்துகள் வலி நிவாரணம், தோல் பராமரிப்பு, நோய் எதிர்ப்பாற்றல், தசை பிடிப்பு போன்றவற்றுக்காக பயன்படுத்தப்பட்டவை.

'அமாக்சிலின் - செராட்டியோபெப்டிடேஸ், அமாக்சிலின் - குளோக்சாசிலின்' உள்ளிட்ட சில நோய் எதிர்ப்பு சேர்க்கைகளும் இதில் அடங்கும்.

இந்த தடை உத்தரவை மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.