ஹார்ட் அட்டாக்கை உண்டாக்கும் பெர்பெக்ட் ஹெல்த்தி மனநிலை

ஒரு காலத்தில் ஹார்ட் அட்டாக் என்றாலே வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்று நம்பினோம். தற்போது, இளம் வயதினருக்கு மத்தியில் பொதுவான விஷயமாகி விட்டது.

'பெர்பெக்ட் ஹெல்த்தி' என்ற ஆங்கில வார்த்தை தற்போது இளம் வயதினரிடம் பிரபலமாக உள்ளது. ஆரோக்கியம் என்பதற்கு உதாரணமாக நாம் இருக்க வேண்டும் என பலரும் நினைப்பதால் பிரச்னை ஆரம்பிக்கிறது.

குறிப்பாக, 'பிட்னஸ்' எனப்படும் உடல் தகுதியில் ஆர்வமுள்ள இளைஞர்களை இந்த மனநிலை பாதிக்கிறது. தீவிரமான உடற்பயிற்சி செய்யும் போது, ஹார்ட் அட்டாக்கால் ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இது, பெர்பெக்ட் ஹெல்த்தியில் உள்ள ஆர்வத்தின் விளைவு தான்.

ஹார்ட் அட்டாக் வந்த பின், மருந்துகள், ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்வது தீர்வாக அமையும். இதை விட, பிரச்னை வருவதற்கு முன், வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்வது வராமலேயே தடுக்கும்.

தீவிர உடற்பயிற்சியால் இதய ஆரோக்கியத்தை சீராக நிர்வகிக்கலாம் என்பது தவறான கருத்து. உடற்பயிற்சியை தினசரி ஒழுங்குமுறையாக மாற்ற வேண்டும்.

தினசரி நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, ஏரோபிக் பயிற்சிகள், தசைகளை வலிமைப்படுத்தும் பயிற்சிகள், தசை தளர்வு பயிற்சிகளை வாரத்தில் 150 நிமிடங்கள் செய்தால் போதும்.

மிதமான உடற்பயிற்சிகள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

அதை விடுத்து தீவிரமாக பயிற்சி செய்யும் போது, ரத்த நாளங்கள் கிழிவது, கொரோனரி ஆர்ட்டரி பாதிப்பு, பிளாக் வெடித்து ரத்தம் ஓட்டம் தடைபட்டு ஹார்ட் அட்டாக் வருகிறது.

இது தவிர, உடற்பயிற்சியின் போது சீரற்ற இதயத் துடிப்பு, இதய வால்வுகளில் பிரச்னை, அயோட்டா எனப்படும் மகா தமனி கிழிவது போன்ற பிரச்னைகளும் வரலாம்.

ஆர்வம் மிகுதியால் தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள், இந்த அறிகுறிகளை ஆரம்பத்தில் கவனிக்காமல் போகலாம். ஆபத்து காலத்தில் முதலுதவி செய்ய, பயிற்சி பெற்ற ஊழியர்கள் இருப்பதும் அவசியம்.