ஒடிசாவில் கண்ணாம்பூச்சி விளையாடும் கடற்கரை..!
உலகில் 7 அதிசயங்கள் தவிர, மேலும் சில அதிசயங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. அதில், ஒன்றாக ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் கடற்கரை உள்ளது.
வேறு எங்கும் கண்டிராத அரிதான நிகழ்வு சந்திப்பூர் கடற்கரையில் நடக்கிறது. இங்கு ஒவ்வொரு நாளும் 5 கி. மீ., தூரத்துக்கு கடல் உள்வாங்குகிறது.
இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் உள்ள பாலேஸ்வர் மாவட்டத்தில்தான் சந்திப்பூர் கடற்கரை உள்ளது. இது தலைநகரமான புவனேஸ்வரிலிருந்து சுமார் 200 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது.
கடற்கரை அலைகளின் வேறுபாட்டால் கடல் நீர் உள்வாங்குகிறது என அறிவியல்ரீதியான காரணம் கூறப்படுகிறது.
அலையின் ஆற்றல் குறையும்போது கடல் 5 முதல் 6 கிலோமீட்டர் வரை உள்வாங்குகி பின்னர், அலை உயரும்போது கடல் நீர் மீண்டும் கரைக்கு திரும்புகின்றது.
இந்நிகழ்வுக்கு நிலையான நேரமில்லை என்றாலும் இது சந்திரனின் சுழற்சியை பொறுத்து நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு முறை நடக்கிறது.
முக்கியமாக பவுர்ணமி மற்றும் அமாவாசையின்போது அலைகளின் வேகம் உச்சக்கட்டத்தை எட்டும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், கடல் குதிரைவாலி நண்டுகள், அரச நண்டுகள், நட்சத்திர மீன்கள், ஆமைகள் போன்ற ஏராளமான அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக சந்திப்பூர் கடற்கரை உள்ளது.