அசத்தலான செட்டிநாட்டு வெந்தயக்குழம்பு

மிக்சி ஜாரில் தேங்காய் துருவல் 2 டீஸ்பூன், 4 பல் வெள்ளைப்பூண்டு, 1/2 டீஸ்பூன் குருமிளகை நைசாகவோ கொரகொரப்பாகவோ இல்லாமல், இடைப்பட்ட பதத்தில் அரைத்து தனியே வைக்கவும்.

ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெந்தயம் போடவும். பொன்னிறமாக வறுபட்டவுடன் தொடர்ந்து உளுத்தம்பருப்பை சேர்க்கவும்.

100 கிராம் சி.வெங்காயம் சேர்த்து வதங்கியவுடன், 40 கிராம் வெ.பூண்டை சேர்க்கவும். ஒரு சில நிமிடங்கள் கழித்து படிப்படியாக 4 ப.மிளகாய், 3 தக்காளி, சிறிது கறிவேப்பிலை என சேர்த்து வதக்கவும்.

சிறிதளவு உப்பை சேர்த்தால் விரைவில் வதங்கக்கூடும். வெங்காயம், தக்காளியை குறைவான தணலில் தான் வதக்க வேண்டும். அப்போதுதான் சுவை தூக்கலாக இருக்கக்கூடும்.

ஒரு சில நிமிடங்கள் கழித்து இதில் தலா 2 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள், சிறிது மஞ்சள்தூளை சேர்க்கவும். பின், புளிக்கரைசலை ஊற்றி, கூடுதலாக ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

10 நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்த தேங்காய் கலவையை இதில் சேர்க்கவும். பின், ஓரிரு நிமிடங்கள் கழித்து 2 டீஸ்பூன் சீரகம் மற்றும் வெந்தயப்பொடியை சேர்க்கவும்.

அப்போது அடுப்பை குறைவானத் தணலில் வைத்தால், எண்ணெய் பிரிந்து வரும். இந்த பதத்தில் 1/4 டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து இறக்கிவிடவும்.

பின்னர், சிறிதளவு நல்லெண்ணெய், கொத்தமல்லி இலையை சேர்த்து மூடி வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.