ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி

தேவையானப் பொருட்கள்: புளிச்ச கீரை (கோங்குரா) இலை - 2 கப், பூண்டு - 5 பல், உரிக்காத பூண்டு - 5 பல், காய்ந்த சிவப்பு மிளகாய் - 7, பச்சை மிளகாய் - 5, எண்ணெய் - 4 டீஸ்பூன்.

கொத்தமல்லி விதை - 1.5 ஸ்பூன், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன், சீரகம்- 1 டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப.

அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி விதைகள், சிவப்பு மிளகாய், சீரகம், பூண்டு, வெந்தயம், ப.மிளகாய் ஆகியவற்றை நன்றாக வறுத்து தனியே வைக்கவும்.

பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கோங்குரா இலைகளை சேர்த்து நன்றாக வதக்கி, ஆறியவுடன் வறுத்த மசாலா கலவையையும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

விருப்பப்பட்டால் இதனுடன் நறுக்கிய பாதி வெங்காயத்தைச் சேர்த்து கலந்தால் சுவை அள்ளும்.

அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சிவப்பு மிளகாய், உரிக்காத பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள கோங்குரா விழுதை சேர்த்து நன்கு கலக்கி, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

எண்ணெய் பிரியும் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்தால், சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி இப்போது ரெடி.