அழுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

அழுகை மன அழுத்தம் மற்றும் வலியைக் குறைக்க உதவும் ஒரு சாதாரண மனிதனின் செயல்பாடு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் மற்றவருக்காக இரக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சியாகவும் இருக்கிறது.

கண்ணீர் வடிவதனால் உடலில் எண்டார்ஃபின் மற்றும் ஆக்சிடோசின் வெளியாகின்றன. ஃபீல் குட் கெமிக்கல் என்றழைக்கப்படும் இவை, நம் உடல் மற்றும் மன வலியை குறைக்கிறது.

கண்ணீர் கண்களில் ஈரப்பதத்தை நிலைத்து வைக்க உதவுகிறது. இதனால் கண்கள் வறண்டு போகாமலும், பார்வை மங்காமலும் பார்த்துக் கொள்கிறது.

ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும்போதும் வெளியாகும் கண்ணீர் திரவம், தூசு துகள்களை நீக்கி, எரிச்சலை தடுக்க உதவுகிறது.

பிறந்த குழந்தைகளின் முதல் அழுகை மிக முக்கியம். கருவில் இருக்கும்போது, தொப்புள் கொடி வழியாக குழந்தைகள் சுவாசத்தை பெறும். வெளிவந்தவுடன் அவர்கள் தாங்களாகவே சுவாசிக்கத் தொடங்க வேண்டும். அதற்கு அழுகை உதவுகிறது.

கண்ணீரை சுரக்கும் இந்த லாக்ரிமல் சுரப்பியில் நரம்பு வளர்ச்சிக்கான புரதம் ஒன்று உள்ளது. இது நியூரான்களின் வளர்ச்சிக்கு முக்கியமான அம்சமாகும்.

இதன் காரணமாக ஏற்படும் நியூரல் பிளாஸ்டிசிட்டி அழும்போது மனநிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாக அறியப்படுகிறது.