இன்று இந்திய சுதந்திர தினம்....ஆகஸ்ட் 15ல், ஏன் சுதந்திரம்?
உலக போர் சமயத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், உள்நாட்டு பிரச்னைகள் நிலவிய இந்தியாவை, திறமையான ஒரு நபரால் மட்டுமே பிரிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்து, இங்கிலாந்து அரசாங்கத்தால் அனுப்பப்பட்டவர் தான், மவுன்ட் பேட்டன்.
சுதந்திரத்திற்கான வேலை வேக வேகமாக, மவுன்ட் பேட்டன் தலைமையில் நடந்தது. ஜனவரி 26ம் தேதி சுதந்திரம் கொடுக்குமாறு வலியுறுத்தினார், ஜவஹர்லால் நேரு.
காரணம் ஜனவரி, 26, 1930ல், ராவி நதிக்கரையில், சுதந்திர போராட்ட வீரர்கள் நம் மூவர்ணக் கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டனர். அந்த நாளை சுதந்திர நாளாக கொண்டாடுவோம் என்றும் முழக்கமிட்டார், நேரு.
ஆக., 15, 1945ல், பிரிட்டனின் தெற்காசிய படைப்பிரிவின் படைத் தலைவரான மவுன்ட் பேட்டனிடம் சரணடைந்தது, ஜப்பான். இதன் மூலம் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
இந்த வெற்றியின் நினைவாக தான், நேருவின் ஜனவரி 26ஐ நிராகரித்து, தன் வெற்றி நாளான ஆகஸ்ட் 15ல் இந்தியாவுக்கு சுதந்திரம் என, நாள் குறித்தார்.
அதன்பின், நாட்டின் இதயமான, அரசியல் அமைப்பை நிறைவேற்றி, இந்தியாவை முழு குடியரசு நாடாக, ஜன., 26, 1950ல், குடியரசு தினமாக அறிவித்தார், நேரு.