இன்று 386வது சென்னை தினம்

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. 386வது சென்னை தினம் ஆகஸ்ட் 22ல் கொண்டாடப்படும் தருணத்தில், சில, 'ப்ளாஷ்பேக்' நினைவுகள்...

கிழக்கிந்திய கம்பெனியர், கிழக்கு கடற்கரையோரம் இடம் வாங்குவதற்கு முன்பே, 16ம் நூற்றாண்டில் சென்னைக் குப்பம், மதராஸ் குப்பம், ஆறு குப்பம் என்ற, 3 சிறு குடியிருப்புக் கூடங்கள் இருந்தன.

கி.பி., 1639ல், பிரான்சிஸ் டே, கோகன் என்ற இரு ஆங்கிலேய பிரதிநிதிகள் குடிசைகளில் கிரகப்பிரவேசம் நடத்தினர். இது தான், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஆரம்பம்.

புனித ஜார்ஜ் கோட்டை, இந்தியாவில், 1644ல் மேலை நாட்டவர்கள் கட்டிய முதல் கோட்டை இது தான். இந்த கோட்டை 1921ல் இருந்து தமிழக சட்டசபையாக உள்ளது.

சேப்பாக்கம் அரண்மனை - கடந்த, 1749ல், நவாப் பதவிக்காக ஒரு போர் நடந்தது. ஆங்கிலேயர்கள் ஆதரவோடு ஆற்காடு நவாப்பான முகமது அலி அரியணையில் ஏறினார்.

அவரின் அரண்மனைக்காக சேப்பாக்கத்தில், 117 ஏக்கர் நிலத்தில், 1768ல், கட்டி முடித்தது தான் இந்த பிரமாண்ட அரண்மனை. ஹுமாயுன் மஹால், கலஸ் மஹால் என 2 பகுதிகளை கொண்டது.

ராயபுரம் ரயில் நிலையம் தென் மாநிலத்தின் முதல் ரயில் நிலையம். இங்கிருந்து தான், தென் மாநிலத்தின் முதல் ரயில், ராயபுரத்திலிருந்து ஆற்காடுக்கு, தன் பயணத்தை துவங்கியது.

சென்னை கடற்கரையில் அப்போதைய நவாப், முகமது அலி வாலாஜா என்பவர், குளியல் குளம் இணைந்த கட்டடம் ஒன்றை கட்டினார். இதற்கு, மரைன் வில்லா எனப் பெயர். இது திரிந்து, மெரினாவானது.

இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இருந்து, இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக, 1788ல் மெட்ராசுக்கு வந்தார், தாமஸ் பாரி. அவருக்கு பார்ட்னராக வந்து சேர்ந்தார், ஜான் வில்லியம் டேர்.

பாரி கட்டடத்தின் பெயர், 'டேர் ஹவுஸ்' என்று இருப்பதற்கு இந்த, டேர் தான் காரணம். இரு நுாற்றாண்டுகளை கடந்த பின்பும், அந்த இரண்டு வர்த்தகர்களின் பெயர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை.