மாதுளம்பழத் தோலிலும் நன்மைகள் இருக்கு...!

ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால் ஆரோக்கியத்தில் மாதுளம்பழத்துக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. பழத்தில் மட்டுமின்றி, அதன் தோலிலும் இந்த ஊட்டச்சத்துகள் உள்ளன.

ஆனால் மாதுளையை மட்டும் சாப்பிட்டு விட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடுகிறோம். இதிலுள்ள நன்மைகளை தெரிந்துகொண்டால் இனிமேல் தோலை வீசாமல் பத்திரப்படுத்தி வைக்கத்தான் தோன்றும்.

முகப்பரு, சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்னைகளுக்கு மாதுளம்பழத்தோல் தீர்வாகிறது.

தோலை வெயிலில் நன்றாக காயவைத்து மிக்சியில் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப்பொடியுடன் சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம்.

இதனால் சருமத்தில் கொலாஜன் உற்பத்தி அதிகரித்து சுருக்கங்கள் வரவிடாமல் தவிர்க்கிறது. சருமத்துக்கு இளமைத்தோற்றம் கிடைப்பதுடன், பளபளப்பு அதிகரிக்கிறது.

மாதுளையின் தோலில் உள்ள பாலிஃபினைல்கள் கல்லீரலைப் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது.

மாதுளையின் தோலில் அதிக அளவிலான ஆக்சிஜனேற்றிகள் இருக்கின்றன. இது காது கேளாமை மற்றும் காது தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது.

இது பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால், ஈறுகள் வலுவடைவதுடன், பற்கள் பளிச்சிடுகிறது.

இதயம் தொடர்பான பிரச்னைகள், நீரிழிவு போன்ற பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.