சுவாச நோய்களை தீர்க்க வந்த துாதுவன் தூதுவளை!!

தூதுவளைக்கு தூதுணை, தூதுவளம், தூதுவேளை, சிங்கவல்லி, அளர்க்கம் என பல பெயர்கள் உண்டு.

இதில் சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

துாதுவளை இலைகளை பறித்து நிழலில் உலர்த்தி, முட்களை நீக்க வேண்டும். ஏனெனில், முள்ளில் சற்று நச்சுத்தன்மை உள்ளதால், சமையல் செய்வதற்கு முன்பே நீக்க வேண்டியது அவசியம்.

இலைகளை எண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி, அரைத்து சாப்பிடுவதால் சளி, ஆஸ்துமா, நாள்பட்ட காய்ச்சல் காணாமல் போகும்.

பித்தத்தால் ஏற்படும் வாந்தியை மட்டுப்படுத்தும். பார்வைக் குறைபாடு பிரச்னையை சரி செய்கிறது. ரத்த சோகை பிரச்னையையும் தீர்க்கும்.

நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாயில் உள்ள சளியை வெளியேற்ற தூதுவளை இலையில் சாறு பிழிந்து தேன் சேர்த்து குடிக்கலாம்.

தூதுவளையின் காயை, காயவைத்து பொடித்து அரை டம்ளர் வெந்நீரில் கலந்து அருந்தினால் உடல் வலி, தலை பாரம் போன்றவை நீங்கும்.

ஒரு கைப்பிடி துாதுவளை இலை, கருப்பு உளுந்து, புளி, தேங்காய் துருவல், சில பூண்டு பற்கள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நல்லெண்ணெயில் வதக்கி அரைத்து, உப்பு சேர்த்தால், துவையல் தயார்.