ராமேஸ்வரம் அருகேயுள்ள பாம்பன் ரயில்வே பாலத்துக்கு இன்று (பிப்., 24) 110வது பிறந்த நாள்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரயில், கப்பல் பாம்பன் கடலை கடந்து செல்ல 'டபுள் லீப் கேண்ட்லீவர்' கொண்ட பாலம் கட்ட 1899ல் முடிவு செய்யப்பட்டு, 1913ல் கட்டுமான பணி துவங்கியது
கடலில் 2.05 கி.மீ., துாரம், 145 துாண்கள், நடுவில் 218 அடி நீளத்தில் துாக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டது. இந்தியாவில் கடல் மீது அமைந்த முதல் பாலம் என்ற பெருமை இப்பாலத்திற்கு ஏற்பட்டது.
அதிகபட்சம் 81 டிகிரி வரை திறந்து மூடும் வகையில் அமைத்து 1914 பிப்., 24ல் முதல் ரயில் போக்குவரத்து துவங்கியது.
1964 டிச., 22ல் தாக்கிய புயல் பாம்பன் பாலத்தை புரட்டி போட்டதில், 124 துாண்கள் கடலில் இழுத்து செல்லப்பட்டது. தனுஷ்கோடியில் ரயில் கவிழ்ந்து பலர் உயிரிழந்தனர்.
இதனால் ரயில் போக்குவரத்தை நிறுத்தினாலும், புனரமைப்பு பணிகள் விரைந்து துவக்கி 67 நாட்களில் பணிகள் முடிந்து, மீண்டும் போக்குவரத்து துவங்கினர்.
காற்றின் வேகத்தை அளவிடும் வகையில் நடுப்பாலத்தில் அனிமா மீட்டர் பொருத்தி 58 கி.மீ.,க்கு மேல் காற்று வீசினால் கிரீன் சிக்னல் காட்டாமல், ரயில் செல்ல தடை விதிக்கப்பட்டது.
பல இக்கட்டான சூழ்நிலையை கடந்த பாம்பன் பாலத்தை 2005 ஏப்., 30ல் ரூ. 24 கோடியில் அகலப்படுத்தும் பணி துவக்கியதும், போக்குவரத்தை நிறுத்தப்பட்டு, 2007 ஆக., 12ல் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது.
நுாறு ஆண்டு கடந்த பாலத்தில் நடுவில் உள்ள துாக்கு பாலம் அடிக்கடி பழுது ஏற்பட்டு பலவீனமானது. கடந்தாண்டு நவ., 23ல் மீண்டும் இரும்பு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்தை ரயில்வே முற்றிலும் நிறுத்தியது.
அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. பல கோடி பயணிகளை தாங்கிய சுமை தாங்கியாக விளங்கிய பாலம் விடை பெறப்போகும் தகவல் மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.