அதிகரிக்கிறது மார்பக புற்றுநோய் சுயபரிசோதனையில் கண்டுபிடிக்கலாம்
பெண்களுக்கு வாழ்வியல் மாற்றங்களால் மார்பக புற்றுநோய் அதிகரித்து வரும் சூழலில், அவ்வப்போது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
தமிழ்நாடு புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை 2019ன் படி கன்னியாகுமரி, கோவை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், அதிகளவில் இப்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல பெண்கள் விழிப்புணர்வு இன்றி இரண்டு, மூன்றாம் நிலையில் சிகிச்சைக்கு வருவதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
மார்பக புற்றுநோய் 50, 60 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கே முன்பு கண்டறியப்பட்டது. சமீபகாலங்களில், 35 வயதிலும் இப்புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
உணவு, அதிக கொழுப்பு உள்ள உணவு, தவறான டயட் முறை காரணங்களால் மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளது.
மேற்கத்திய உணவு பழக்கவழக்கங்கள் இதற்கு முக்கிய காரணம். குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே சரியான உணவு பழக்கவழக்கங்களை, சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்.
மார்பக புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை, ஆரம்ப நிலையில் கண்டறிய சுய பரிசோதனை அவசியம்.
கட்டிகள் ஏதும் தென்பட்டாலோ, மாற்றங்கள் இருந்தாலோ, மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யவேண்டும். ஆரம்பத்தில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.