மாரடைப்பின் அறிகுறிகள் என்னென்ன?
மாரடைப்பின் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். முன்கூட்டியே அறிந்து சிகிச்சைகளை எடுக்கும் போது உயிரிழப்பை தவிர்க்க முடியும்.
மார்பு பகுதியில் வலி, அசவுகரியம், அழுத்தம், மிகப் பெரிய பாரத்தை எடுத்து மார்பு பகுதியில் வைப்பதை போன்ற அழுத்தம், பிசையும் உணர்வு இருக்கும்.
மார்பு பகுதியில் ஏற்படும் வலி அப்படியே தோள்களுக்கு பரவும்; அதன்பின் கைகளுக்கு பரவும். குறிப்பாக இடது பக்க தோள், கை, கழுத்து, தாடைப் பகுதி, பின்பக்க அல்லது மேல் பக்க வயிற்றில் பரவும்.
ஓய்வாக இருக்கும் நேரங்களில் கூட சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். சிலருக்கு மிதமான வேலை செய்தாலும் சுவாசிப்பதில் சங்கடம் ஏற்படலாம்.
வழக்கத்திற்கு மாறாக அதீதமாக வியர்க்கும்.சில நேரங்களில் வயிற்றில் அமில சுரப்பு இருப்பதை போன்ற அறிகுறிகள் தெரியும்.
குறிப்பாக, பெண்கள், முதியவர்கள், நீரிழிவு பாதித்தவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக, உடல் பகுதிகளில் வலி, வயிறு மேல்பகுதியில் அசவுகரியம், தாடை, தொண்டையிலும் இதே உணர்வு இருக்கும்.
சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் மாரடைப்பு ஏற்படலாம். இதை, 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' என்பார்கள் . இதில் குறிப்பிட்டு உணரும் படியான மார்பு வலி எதுவும் இருக்காது.
மாரடைப்பிற்கான அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். அறிகுறிகள் இருந்தாலே, தாமதப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியம்.