கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக்.... வித்தியாசம் அறிவோமா?
கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன? இது ஹார்ட் அட்டாக்கிலிருந்து எப்படி வேறுபடுகிறது? என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.
இரண்டும் இதயத்துடன் தொடர்புடைய அவசர நிலைகள் என்றாலும், கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் ஒன்றல்ல.
கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயம் திடீரென ரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்தும் நிலை; மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு ரத்தம், ஆக்சிஜன் செல்வது திடீரென குறைகிறது.
பொதுவாக இதயத்தின் மின் இயக்கத்தில் ஏற்படும் கடுமையான பிரச்னை காரணமாக இதயம் சரியாகத் துடிக்காமல் போகிறது.
கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால், ஒருவர் திடீரென மயங்கி விழலாம், சுயநினைவை இழக்கலாம் மற்றும் இயல்பாக சுவாசிக்காமல் இருக்கலாம்.
இந்நிலை ஏற்பட்டால் உடனடியாக சி.பி.ஆர்., ( CPR ) மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.
ஹார்ட் அட்டாக் என்பது இதய தசைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படும் நிலை.
அடைப்பு காரணமாக இதயத்தின் ஒரு பகுதிக்கு போதுமான ரத்தமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போகிறது. இதனால், அந்தப் பகுதியிலுள்ள இதய தசை பாதிக்கத் துவங்குகிறது.
ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ள நபர் பொதுவாக சுய நினைவுடன் இருக்கலாம். ஆனால் மார்பு வலி அல்லது அழுத்தம், மூச்சுத்திணறல், அதிக வியர்வை, குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
கடுமையான ஹார்ட் அட்டாக் சில நேரங்களில் இதயத்தின் மின் இயக்கத்தை பாதித்து சீரற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தலாம். இதனால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட ஹார்ட் அட்டாக் மட்டுமே காரணம் அல்ல. பல்வேறு இதய நோய்கள் மற்றும் இதயத்தின் மின் இயக்கக் கோளாறுகளும் காரணமாக இருக்கலாம்.