தொடர்ந்து அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்... கர்ப்பிணியர் எடை கூடுவது, இணை நோய் காரணம் !

தமிழகத்தில், சிசேரியன் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2024 - 25 மார்ச் வரை, 8.16 லட்சம் பிரசவங்கள் நடந்ததில், 4.1 லட்சம் சிசேரியனாக பதிவாகியுள்ளன.

கருவிலுள்ள குழந்தையின் சீரற்ற இதயத்துடிப்பு, குழந்தை மற்றும் கர்ப்பிணியர் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, தைராய்டு, ரத்த சோகை போன்றவை சிசேரியன் அதிகரிக்க முக்கிய காரணங்களாகும்.

மேலும், ரத்த அழுத்தம், பிற இணை நோய்களால் கர்ப்பிணியர் பாதிக்கப்படுவது போன்றவையும் இதில் அடங்கும்.

கர்ப்பம் தரித்ததில் இருந்து, பிரசவ காலம் வரை, 10 கிலோ உடல் எடை கூடலாம்; அதை மீறி அதிக எடை கூடுவதும் சிசேரியனாக காரணமாகலாம்.

கர்ப்ப காலத்தில் உணவு முறையிலும், உடற்பயிற்சியிலும் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பாரம்பரிய பழக்கம் என வருபவர்கள் எல்லாம், இனிப்பு பலகாரங்களை வாங்கி வந்து தருகின்றனர். இது, முற்றிலும் தவறான பழக்கம்.

இனிப்புகளை தவிர்த்து, சத்தான பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து, புரதச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டாக்டர்களின் அறிவுரைப்படி 'செக் அப்' செய்வதும், மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொள்வதும் அவசியமாகும்.

அதிக எடை துாக்குவது, அதிக சோர்வை ஏற்படுத்தும் வேலையை தவிர்த்து, அனைத்து வேலைகளையும் செய்யலாம்.

நடைபயிற்சி செய்வதுடன், சரியான உணவு உட்கொண்டால், சுகப்பிரசவம் நடக்க அதிக வாய்ப்புகள் உண்டு.