சிறார் பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்; கட்டணமும் அதிகரிப்பு
நாட்டில், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 36 பக்க பாஸ்போர்ட், வழங்கப்பட்ட தேதியிலிருந்து, 5 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் அல்லது அந்த சிறாருக்கு, 18 வயது பூர்த்தியாகும் வரை மட்டுமே செல்லும்.
இதில், எது முன்னதாக வருகிறதோ அதுவே கணக்கில் எடுக்கப்படும். உதாரணத்துக்கு, 10 வயது சிறுவனுக்கு பாஸ்போர்ட் எடுத்தால் 15 வயதாகும் வரை செல்லும்.
அதுவே, சிறுவனுக்கு, 14 வயது நடக்கும் போது பாஸ்போர்ட் எடுத்தால், 18 வயது எப்போது முடிகிறதோ, அந்த நான்கு ஆண்டுகளிலேயே அந்த பாஸ்போர்ட் காலாவதியாகிவிடும்.
ஏனெனில், 18 வயது பூர்த்தியானவுடன், மேஜர் பிரிவுக்குள் சிறுவன் வந்துவிடுவார்.
இதற்கு முன், இந்த விதி, 5 ஆண்டுகள் அல்லது சிறார்களுக்கு, 15 வயதாகும் வரை மட்டுமே செல்லுபடியாகும் வகையில் இருந்தது.
புதிய நடைமுறையால் குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகளை அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய அவசியம், இனி பெற்றோருக்கு இருக்காது.
சிறார்களுக்கான சாதாரண, 36 பக்க பாஸ்போர்ட்டின் விலை, 1,000 ரூபாயில் இருந்து, 1,775 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
'தத்கால்' பாஸ்போர்ட் கட்டணம், 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.