உடல் பருமனால் பாதிக்கப்படும் குழந்தைகள்

உலகில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை விட, உடல் பருமனுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா.,வின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

190 நாடுகளில் 5 - 19 வயதுக்குட்பட்டவர்களில் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை 2000ல் 13 % ஆக இருந்தநிலையில் தற்போது 9.2 % ஆக குறைந்துள்ளது.

அதே நேரம் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை, 3 %ல் இருந்து 9.4 % ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் 5ல் ஒரு குழந்தைக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. பசிபிக் தீவுகளில் அதிகமாக காணப்படுகிறது.

துரித உணவு, உடற்பயிற்சியின்மை உள்ளிட்டவை இதற்கு காரணம் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு உடல் பருமன், டைப்-2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

அதுமட்டுமின்றி அவர்களின் வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் மன நல்வாழ்வும் பாதிக்கப்படுகிறது.

இதை தவிர்க்க ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகள் எடுக்க வேண்டும்; அதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரையாகும்.

பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த பாரம்பரிய உணவுகளுக்கு மாற்றினால் மட்டுமே இதனை சரி செய்ய முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.