ஆயுள், ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும் கொலோஜென்!

சமீப ஆண்டுகளில், 25, 35 வயதிலேயே, தோல் சுருக்கம் ஏற்பட்டு, வயதானதைப் போன்ற தோற்றத்துடன் உள்ள பலரையும் அதிகம் பார்க்க முடிகிறது.

வயதாக ஆக தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பு. இதற்கு காரணம், நம் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும், கொலோஜென் எனும் புரதம், படிப்படியாக குறைய துவங்குவதுதான்.

இளம் வயதில், இதன் உற்பத்தி குறைந்து, தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு காரணம், மன அழுத்தம்.

இதற்கு காரணமான, 'கார்ட்டிசால்' ஹார்மோன் உற்பத்தி அதிகமாகும் போது, கொலோஜென் உற்பத்தியை மறைமுகமாகக் குறைத்து விடுகிறது.

இதை தவிர்க்க ஒரே வழி, இயற்கையான முறையில் கொலோஜென் உற்பத்தியை, உணவு வாயிலாக அதிகரிப்பது.

தாவர உணவுகள் சார்ந்த புரதங்களை விட, மீன், கோழி இறைச்சி, முட்டை சாப்பிடும் போது, இவற்றிலுள்ள புரதம் கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

அசைவ உணவுகளை சாப்பிடுவோர், வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை சேர்க்கலாம்.

முழு தானியங்கள், பருப்பு வகைகள், கால்ஷியம், மெக்னீஷியம், இரும்புச் சத்துள்ள தண்டுக்கீரை, பசலைக்கீரையை அடிக்கடி சேர்க்கலாம்.

அதிக வேதிப்பொருட்களுள்ள கிரீம்கள், சோப்புகளை பயன்படுத்தும் போது, இயல்பாக இருக்கும் கொலோஜென் உற்பத்தியை தடுத்து விடும்.

எனவே, வாரத்தில் 2 நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து, பாசிப்பருப்பு, கடலைமாவு போன்ற இயற்கையான பொடிகளை தேய்த்துக் குளிப்பது, முகத்தில் சுருக்கங்களை நீக்கும்.

சிறிது எலுமிச்சை சாறுடன், வெள்ளைச் சர்க்கரையை சேர்த்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவினால், கொலோஜென் உற்பத்திக்கு உதவும்.

நீராகாரம், ஒமேகா 3 பேட்டி ஆசிட், சியா, ஆளி விதைகள், அக்ரூட் போன்றவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும் அவசியம்.

கொலோஜென் உற்பத்தி சீராக இருப்பது, வெறும் பொலிவுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.