இந்தத் தீவில் உள்ள மண்ணைச் சாப்பிட்டு உயிர் வாழலாம் தெரியுமா..!
பழுப்பு நீரோடைகள், கருஞ்சிவப்பு கடற்கரைகள், உப்பு குகைகள் என புவியியல் மாற்றத்தால் அற்புதத் தலமாகக் காட்சியளிக்கிறது, ஈரான் நாட்டின் கடற்கரையிலிருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ள ஹோமுஸ் தீவு.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், ஆழமற்ற கடல்கள், பாரசீக வளைகுடாவின் (persian gulf) ஓரங்களைச் சுற்றி, அடர்த்தியான உப்பு அடுக்குகளை உருவாக்கியது என்கிறார் புவியியலாளர் கேத்ரின்.
இந்த உப்பு அடுக்குகள் படிப்படியாக இப்பகுதியில் உள்ள கனிமங்கள் நிறைந்த எரிமலையில் மோதின. இதனால் இவை ஒன்றோடொன்று இணைந்து வண்ணமயமான நிலப்பரப்பை உருவாக்கியுள்ளது.
'ரெயின்போ தீவு' என அழைக்கப்படும் இந்த தீவில், உலகில் உண்ணக்கூடிய மண்ணைக் கொண்ட மலை உள்ளது. எரிமலை பாறைகளிலிருந்து பெறப்படும் இரும்பு ஆக்சைடான ஹெமடைட் இதற்கு காரணம்.
உள்ளூர் மக்கள் இந்த மண்ணை சமைத்து சாப்பிடுகின்றனர். மீன்கள், ஊறுகாய்களில் மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது. டாம்ஷி என்ற ரொட்டியுடன் சேர்த்து இந்த மண்ணை உண்கின்றனர்.
உடலுக்குத் தேவையான 70 வகையான தாதுக்கள், கனிமங்கள் இந்த மண்ணில் உள்ளதால், சாப்பிடுபவர்களின் வயிற்றின் செரிமான அமிலத்தால் இந்த மண் செரிமானம் செய்யப்படுகிறது.
இதைத் தவிர இந்த சிவப்பு மண் சாயமிடுவதற்கும், மண்பாண்டங்கள் செய்வதற்கும், அழகுச் சாதனப் பொருட்களின் மீது ஓவியங்களை வரைவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தீவின் தென்மேற்கில் ரெயின்போ பள்ளத்தாக்கு உள்ளது. சிவப்பு, ஊதா, மஞ்சள், பழுப்பு, நீலம் என பல வண்ணங்களைக் கொண்ட மலைகள் இங்கு அழகாகக் காட்சியளிக்கின்றன.
கொஞ்சம் கற்பனைக் கண்ணோடு பார்த்தால் பறவைகள், டிராகன்கள், பிற உயிரினங்களைக் போல, இந்த பாறைகள் காட்சியளிப்பதால், இப்பகுதி 'சிலைகளின் பள்ளத்தாக்கு' என அழைக்கப்படுகிறது.