பழ விரதம் ஆரோக்கியம் தருமா?

பழ விரதம் என்பது எடை இழப்புத் திட்டமாகும்; இது உடலை தீவிரமாக சுத்தப்படுத்துகிறது.

பழங்கள் எளிதில் ஜீரணிக்கப்படுவதால், அவை குடல்களை சுத்தப்படுத்துதல், தூண்டுதல் மற்றும் நச்சு நீக்கம் போன்றவைக்கு உதவுகிறது.

ஒரு நபருக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற பழம் மட்டுமே போதுமான ஆதாரமாக இருப்பதில்லை. எனவே, குறுகிய காலத்துக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது.

துவக்கத்தில், ஒரு நாளின் முதல் இரண்டு வேளைகளில் பிரஷ்ஷான புதிய பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். முழுதாக சாப்பிடுவதற்குப் பதிலாக, நறுக்கிய பழங்களை ஐஸ்கட்டிகளுடன் கலந்தும் சாப்பிடலாம்.

பச்சை காய்கறிகளும் அவ்வப்போது இடம்பெறும். தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். காபி, சர்க்கரை கலந்த பானங்கள், ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

சாதாரணமாக விரதம் இருக்கும்போது ஏற்படக்கூடிய சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி போன்றவற்றை முடிந்தளவுக்கு தவிர்க்கலாம்.

நீண்ட காலத்துக்கு பச்சையாக பழங்களை மட்டுமே சாப்பிடும்போது, உடலின் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

பழ விரதத்துக்கு பின்னர், மீண்டும் உணவுப்பழக்கத்தை துவக்கும்போது வயிற்றுவலி, வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

அதேவேளையில், பழ விரதம் ஆபத்தானது; போதிய அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. எடை குறைப்பில் பயனுள்ளதாக இருப்பதில்லை என்பது உட்பட பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன.

எனவே, உடல் எடை குறைப்பு பயணத்தை துவக்கும் முன்னர் டாக்டர்களிடம் கலந்தாலோசிப்பது அவசியமானது.