சுட்டெரிக்கும் வெயிலில் இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க...!

நார்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை கோடையில் சாப்பிடுவது மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. இதில், அதிகளவு நீர்ச்சத்து உள்ளதால் உடலை நீரேற்றமாக வைப்பதுடன், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றான தர்பூசணியில், 91.45 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது உடலின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து நீரேற்றத்துடன் வைக்க உதவுகிறது.

தயிர் சுவையானது மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது. நீர்மோர், மசாலா மோர், லஸ்ஸி, ரைத்தா, ஸ்மூத்தி என பல வழிகளில் தயிரை சாப்பிடலாம்.

கோடையில் பலரின் சாய்ஸாக இளநீர் உள்ளது. வைட்டமின்கள், தாதுக்கள், பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இளநீர் சுட்டெரிக்கும் வெயிலை எதிர்த்து போராட உதவும் குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ளது.

மூலிகைகளில் ஒன்றான புதினாவை சட்னியாகவோ தயிர் அல்லது ரைத்தாவில் சேர்த்தோ சாப்பிடலாம். இது உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமின்றி, புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.

'ஐஸ் ஆப்பிள்' என செல்லமாக அழைக்கப்படும் நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க கிடைத்த அருமருந்தாகும். இதிலுள்ள சத்துக்கள் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றை தவிர்க்க உதவுகிறது.

வெங்காயம் குளிர்ச்சியான பண்புகளை வழங்குகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எலுமிச்சை, உப்பு சேர்த்து சாலட் ஆக செய்து சாப்பிடலாம்.

அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்த முலாம்பழங்களை கோடையில் சாப்பிடும்போது, நீரேற்றத்துடன் இருக்க உதவுவதுடன், குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இனிப்பான எலுமிச்சை ஜூஸ் உடன் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை சீரக தூள் சேர்க்கும் போது சுவை தூக்கலாக இருக்கும்.