கனவுத்தோட்டம்... கறிவேப்பிலை செடி வளர்ப்பது ரொம்ப ஈஸி
கறிவேப்பிலை செடியை வீட்டில் வளர்ப்பது மிக அத்தியாவசியமானது. மரமாய் வளர்க்க வேண்டும் என்றில்லை. குறுஞ்செடியாய் ஒரு தொட்டியில் வைத்து பராமரித்தால் போதும்.
இதில் மலை கறிவேப்பிலை, செங்காம்பு மற்றும் வெள்ளைக்காம்பு கறிவேப்பிலை போன்ற வகைகள் உள்ளன.
கறிவேப்பிலை பழத்திலிருந்து விதைகளை எடுத்து காய வைத்து செம்மண், எரு, மண்புழு உரம், மக்கிய குப்பை கலந்த கலவையில் விதைத்து விட்டால், 10 நாட்களில் முளைத்து துளிர் விட துவங்கும்.
பெரிய மரம் இருக்குமிடத்தில், அதன் கீழேயே விதைகள் விழுந்து செடிகள் முளைத்திருக்கும். அதையும் வேருடன் பிடுங்கி வந்து வளர்க்கலாம்.
ஒரு சின்ன செடியாக நர்சரியில் வாங்கி வந்து, மண் கலவை தயார் செய்து, நட்டு வைப்பது மிகவும் எளிதாகும்.
இச்செடிக்கு இரு வேளையும் நீர் விட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில், 1 மி.லி., வேப்ப எண்ணெயை சேர்த்து தினசரி தெளித்து வந்தால், பூச்சிகள் அண்டாது.
பஞ்சக்காவ்யாவை தண்ணீரில் கலந்து தெளித்து வந்தாலும் செடி செழிப்பாய் வளரும்.
சுவையின்மை, பசியின்மை, செரிமான பிரச்னை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கமறல் ஆகியவை நீங்க, கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இதை தொடர்ந்து உட்கொண்டால் கண் பார்வையில் தெளிவும், இள நரையும் மறையும். பொடி, துவையல், குழம்பு, தேநீர் என, பல வடிவங்களில் கறிவேப்பிலையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.