கோடை காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம்: அடிக்கடி தண்ணீர் குடித்தால் தப்பிக்கலாம்
கோடை காலத்தில் வீட்டில் இருந்தாலும், அடிக்கடி தண்ணீர் குடிக்கா விட்டால், மாரடைப்பு, பக்கவாதம் பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
வெயில் காலத்தில் அதிக அளவிலான நீர், மோர், கஞ்சி, இளநீர் போன்றவற்றை அருந்துவது, உடலுக்கு நன்மையை தரும்.
வெளியே செல்வோர் தான் அருந்த வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்தாலும் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும்.
வெப்ப அலை வீசுவதால், வீட்டிலேயே இருந்தாலும், உடலில் நீர் இழப்பு ஏற்படும். அப்போது பெரிய அளவில் தாகமில்லை என, தண்ணீர் அருந்துவதை சிலர் தவிர்க்கின்றனர்.
அவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும்போது, ரத்த உறைதல் ஏற்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுகிறது.
குளிர், மழை காலத்தை விட, கோடை காலத்தில், மாரடைப்பு, பக்கவாதத்தால் உயிரிழப்பது அதிகமாக உள்ளது.
வீட்டிலேயே இறப்பதால், பலரது இறப்புக்கு என்ன காரணம் என்பதே, அரசின் ஆவணங்களில் குறிப்பிடப்படுவதில்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.
அதனால் வெயில் நேரத்தில், உடலில் நீர்ச்சத்து இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். அதற்கு, வீட்டில் இருந்தாலும் தண்ணீர் அருந்துவது முக்கியம்.
குறிப்பாக, முதியோர் அதிகளவில் நீர் அருந்துவதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.