மழை சீசனில் தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் குடிக்கணும்!

வெயில் காலத்தில் சருமத்திற்கு அளித்த பராமரிப்பை, மழைக்காலத்தில் அளிக்க பலரும் தவறி விடுகின்றனர்.

மழைக்காலத்தின் போது அதிகரிக்கும் ஈரப்பதம், சருமத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, பருவத்திற்கேற்ப சரும பராமரிப்பையும் மாற்றுவது முக்கியம்.

சோப்பு இல்லாத கிளன்சர்கள் எனப்படும், சுத்தப்படுத்திகள் அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது. இவை, மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை வறட்சியாக்காமல், எண்ணெய் மற்றும் அழுக்கை நீக்கும்.

வெயில் காலம் முடிந்தவுடன், பலரும் சன்ஸ்கிரீம் போடுவதை விட்டு விடுகின்றனர். இது மிகவும் தவறானது. மேகங்களுக்குள் சூரியன் மறைந்திருந்தாலும், புற ஊதா கதிர்கள் சருமத்தில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மழைக்காலத்தில் அனைத்து வகையான கிருமிகள், பாக்டீரியாகளால் சருமம் பாதிக்கப்படும். எனவே, பூஞ்சை எதிர்ப்பு பவுடர்கள் அல்லது இயற்கையான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.

அதிக மேக்கப், துளைகளை அடைத்து, உங்கள் சருமத்தை சுவாசிக்க முடியாமல் செய்யும். எனவே, மழைக்காலத்தில் அளவான மேக்கப்புக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.

கோடைக்காலத்தை போல மழை, குளிர் காலங்களில் அதிக தாகம் எடுக்காது. இதனால், நாம் போதுமான தண்ணீர் குடிப்பதில்லை.

ஈரப்பதம் மிகுந்த மழைக்காலங்களில் தேவையான அளவு தண்ணீர் பருகுவதை, உறுதி செய்து கொள்ள வேண்டும். நச்சுக்களை வெளியேற்ற, சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.