அதீத சுறுசுறுப்பு... கவனச்சிதறல் நோயின் அறிகுறி இது!
நிறைய குழந்தைகளுக்கு, கவனச் சிதறல் நோயுள்ளது. இதை, 'அட்டென்ஷன் டெபிசிட் ஹைப்பர் ஆக்டிவ் டிசார்டர்' என்பர்.
இப்பிரச்னை இருந்தால், ஒரு பொருளையோ, விஷயத்தையோ தொடர்ந்து கவனிக்கும் தன்மை குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும். இத்துடன் அதீத சுறுசுறுப்பாக குழந்தைகள் இருப்பர்.
இவை நல்ல விஷயங்கள் தானே என்று தோன்றினாலும், இயல்புக்கு அதிகமாக இருக்கும்போது, பாதிப்பாகத்தான் பார்க்க வேண்டும்.
நாம் சொல்லும் விஷயத்தை குழந்தையால் தொடர்ந்து கவனிக்க முடியாது. பெற்றோர், ஆசிரியர் சொல்லும் கட்டளைகளுக்கு கீழ்படிய மாட்டார்கள்.
அன்றாட வேலைகளை ஒழுங்காக செய்ய முடியாது. படம் வரைவது போன்ற மூளை சார்ந்த வேலைகளை செய்ய முடியாது.
மற்ற குழந்தைகளுடன் இணைந்து படிப்பது, எழுதுவது போன்றவற்றை செய்வது சிரமம். இந்த அறிகுறிகள் தொடர்ந்து, 6 மாதங்களுக்கு மேல் இருந்தால், கவனச் சிதறல் நோய் இருக்கலாம்.
இது மரபியல் காரணியாக இருக்கலாம். கர்ப்பத்தில் இருக்கும்போது, தாய் சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை, மனநிலை, சில வகையான மருந்துகள் இதற்கு காரணமாகலாம்.
பொதுவாக ஒரு விஷயத்தை குழந்தை கற்றுக் கொள்ளும்போது, பொருளைத் தொட்டு, உணரும்போது, மூளை அதை பிம்பமாக மாற்றும்.
இன்று அப்படி இல்லை; மின்னணு சாதனங்களின் வாயிலாக காட்சிகளாகவே மூளையில் பதிகிறது. இதனால், கவனச்சிதறல் நோய் அதிகம் ஏற்படுகிறது.
இது போன்ற குழந்தைகள் துாக்கமின்மையால் சிரமப்படுவர். ஆயுர்வேத மருத்துவத்தில் உரிய சிகிச்சை எடுக்கும்போது, அதீத சுறுசுறுப்பு குறையும்.
மனநல ஆலோசகர், செயல்வழி சிகிச்சை நிபுணர் ஆகியோருடன் இணைந்து இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். அப்போது...
மூளையிலிருந்து வரும், 'டோபமைன்' உட்பட நரம்பு செல்களுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களின் சுரப்பு சீராகும். உடல், மன அளவில் குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும்.