அளவுக்கதிகமான தனிமையும் ஆபத்துதான்... உளவியல் கூறுவதென்ன?
தனிமை... நம்மை நாமாக உணரவைக்கும் ஓர் அற்புதத் தருணம். சமூக நெரிசலில் இருந்து நம்மை சிலகாலம் தனிமைப்படுத்திக் கொண்டால் நம் மனதின் குரல் கேட்கும்.
ஆனால் சமூகத்தோடு தொடர்பற்று அளவுக்கதிகமான தனிமையில் இருப்பது சில நேரங்களில் மனதை பாதித்து எதிர்மறை விஷயங்களை உண்டாக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்களாவது தனிமை மற்றும் மவுனம் தேவைதான்.
இதனால் உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது. அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன் என்ற கார்டிசாலின் அளவும் குறைகிறது.
அதேவேளையில் அளவுக்கதிகமான தனிமை மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. அப்போது கார்டிசால் அளவும் அதிகரித்து மன அழுத்தும் உண்டாகும்.
மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், பறவைகள் கூட பல நாட்கள் தனிமையில் விடப்பட்டால் மன அழுத்தத்துக்கு உண்டாகும். தனிமையில் வாடும் பறவைகள் சில, தங்களது இறகுகளைப் பிய்த்துக்கொள்ளும்.
இதேபோல அதீத தனிமையால் உடலில் சில மாற்றங்கள் உண்டாகும். எப்போதும் ஒருவித படபடப்பு காணப்படும். கை, கால் வலி உண்டாகும். உணவு நேரத்தில் பசி எடுக்காது. உடல் ஆற்றல் குறையும்.
எந்த வேலையையும் செய்ய அலுப்பாக இருக்கும். அன்றாட செயல்களில் சந்தேகம் அதிகரிக்கும். குறிப்பாக தனிமையில் வாடும் முதியோருக்கு இந்த பிரச்னைகள் அதிகமாகக் காணப்படும்.
எனவே, அளவான தனிமையே ஆரோக்கியத்தை அளிக்கும். அளவுக்கதிகமான தனிமை உடல் மற்றும் மன நலத்தைக் கெடுக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.