தங்கத்தை பணமாக்கும் திட்டம் புதுப்பிப்பு.. நகைக்கடையிலும் டிபாசிட் செய்யலாம்!
வீடுகளில் பயன்படுத்தாமல் இருக்கும் தங்கத்தை, நாட்டின் பொருளாதார பயன்பாட்டுக்கு கொண்டு வரும் 'தங்கத்தை பணமாக்கும்' திட்டத்தை மத்திய அரசு புதுப்பிக்கவுள்ளது.
புதிய திட்டம் குறித்து அடுத்த 2 வாரங்களில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை வங்கிகள் வாயிலாக மட்டுமே தங்கம் ஒப்படைக்கப்பட்டது. இனி, நாடு முழுதுமுள்ள நகைக்கடைகளையும் தங்கம் சேகரிக்கும் மையங்களாக நியமிக்க பரிசீலிக்கப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் தங்களிடமுள்ள தங்கத்தை அருகிலுள்ள நகைக்கடைகள் வாயிலாகவே, இத்திட்டத்தில் இணைய வாய்ப்பு கிடைக்கும்.
தங்கத்தை அரசின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் ஒப்படைத்து, அதற்கு வட்டி பெறும் திட்டமே இந்த தங்கத்தை பணமாக்கும் திட்டம்.
குறிப்பிட்ட காலம் முடிந்த பின், தங்கமாகவோ அல்லது அதற்குரிய பண மதிப்பாகவோ திரும்ப பெறலாம்.
எப்படி சேரலாம்?... புதிய திட்டம் அமலான பின், அங்கீகாரம் பெற்ற வங்கி அல்லது நகைக்கடையில் தங்கத்தை ஒப்படைக்கலாம்.
தங்கத்தின் துாய்மை பரிசோதிக்கப்பட்டு அதன் எடை பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் கணக்கு தொடங்கப்பட்டு, வைப்பு காலம் முழுதும் வட்டி வழங்கப்படும்.
ஏன் புதுப்பிக்கப்படுகிறது? கடந்த 2015ல் துவக்கப்பட்ட இத்திட்டத்தில், 10 ஆண்டுகளில் வெறும் 38 டன் தங்கம் மட்டுமே சேர்க்கப்பட்டது.
பாரம்பரிய நகைகளை ஒப்படைப்பதில் மக்களின் தயக்கம், வரி குறித்த அச்சம், வங்கிகளின் ஆர்வமின்மை, அரசுக்கு ஏற்பட்ட அதிக செலவு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
எதிர்பார்க்கப்படும் பலன்கள்... ஆயிரம் டன் வரை தங்கத்தை பொருளாதார பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.
குடும்பங்களிடம் உள்ள தங்கத்தில் 5 சதவீதம் மட்டும் திட்டத்தில் சேர்ந்தாலும், 7 முதல் 8 லட்சம் கோடி ரூபாய் வரை உள்நாட்டு நிதி உருவாகும்.
தங்கம் இறக்குமதி குறைந்து, அன்னிய செலாவணி சேமிக்கப்படும். பயன்படுத்தப்படாத தங்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும்.