மனதை துளைக்கும் குற்ற உணர்வுகள்... நம்மை மன்னிக்க கற்றுக்கொள்வோம் !

முதுமை எட்டி பார்க்கும் சமயத்தில், வாழ்க்கை ஓட்டத்தின் வேகம் குறைந்தாலும், பழைய நினைவுகள் மெல்ல எழ ஆரம்பிக்கும்.

சில நினைவுகள் இனிமையாக இருந்தாலும், சில நினைவுகள், 'அப்படி செய்யாமல் இருந்திருக்கலாம்', 'பிள்ளைகளுக்கு ஏன் பாரம்', போன்ற பல குற்ற உணவுர்களை ஏற்படுத்தும்.

வெளியில் சொல்லாமல் உள்ள, பல மறைக்கப்பட்ட ரகசியங்கள் நம்மை கேள்வி கேட்க துவங்கியிருக்கும். இப்படிப்பட்ட குற்ற உணர்வுகளை, பல முதியோர் எதிர்கொள்கின்றனர்.

இதனால், முதுமையில் உடல், மனம் என்பதை தாண்டி, பலர் குற்ற உணர்வுகளால் தங்களை தாங்களே வருத்திக் கொள்கின்றனர். இக்குற்ற உணர்வு பல வகையில் உள்ளன.

குடும்பத்துடன் நேரம் செலவிடவில்லை, சேமிப்பு செய்யாமல் விட்டுவிட்டோம், பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கிறோம் என தொடர்கிறது.

மேலும், உறவினர்களுடன் சண்டை தவிர்த்து பேசியிருக்கலாம், இறுதியாக மனைவியிடம் மன்னிப்பு கேட்கவில்லை என, குற்ற உணர்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பலர் சிறு வயதில் செய்த, பெரிய தவறுகளுக்கு அப்போது தப்பித்து இருந்தாலும், இப்போது தனக்குத்தானே குற்ற உணர்வு என்ற சிறையில் சிக்கி விடுவார்கள்.

குற்ற உணர்வு தொடர்ந்தால் துாக்கமின்மை, மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.

நடந்தவற்றை இனி ஒரு போதும் மாற்ற முடியாது என்பது உணர்ந்து, கடந்து வருவதை தவிர வேறு வழியில்லை. குற்ற உணர்வு என்பதே, நல்ல மன மாற்றத்திற்கான அடையாளம்.

வாய்ப்பு உள்ளவர்கள், அந்த தவறை சரி செய்து கொள்ள பார்க்கலாம். முடியாதவர்கள் நெருங்கிய நண்பர்களிடம் மனம் விட்டு பேசி, பாரத்தை குறைத்துக் கொள்ளலாம்.

உடல் ஆரோக்கியம் உள்ள முதியவர்கள், பொருளாதார பலம் இருந்தாலும் வீட்டில் இருந்து கொண்டு சிறிய தொழில் செய்து, தங்களை பிசியாக வைத்துக் கொள்ளலாம்.

நம்மை நாமே மன்னித்து, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மனநல ஆலோசகர்களின் அட்வைஸாகும்.