மிஸ்டு கால் மூலம் பணம் பறிக்கும் "சிம் ஸ்வாப் ஹேக்கிங்.."!

மிஸ்டு கால் மூலம் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் 'சிம் ஸ்வாப்' ஹேக்கிங் மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

சிம் ஸ்வாப் மோசடி எப்படி நடக்கிறது, அதிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்துப் பார்ப்போம்.

முதலில் ஸ்கேமர்கள் எனப்படும் இணையத் திருடர்கள் நம்முடைய மொபைல் எண்ணை அறிந்திருப்பார்கள். மேலும் அந்த எண்ணிற்கு ஏதேனும் போலியான இமெயில் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.

சில நேரங்களில் ஏதேனும் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி போல தகவல்களை சேகரிப்பர். இது மட்டுமல்லாது, சமூக வலைதளங்களில் நம் பதிவிடும் தகவல்களையும், அவர்கள் சேகரித்து வைத்துக் கொள்வர்.

அவர்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் கிடைத்தவுடன் நாம் பயன்படுத்தும் மொபைல் எண்ணின் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனத்தை அணுகி அவர்கள் தங்களுடைய மொபைல் திருட்டு போய்விட்டதாகவோ அல்லது சேதம் அடைந்துவிட்டதாகவோ பதிவு செய்வார்கள்.

பின்பு அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்து விட்டால் அது போன்று வேறு ஒரு சிம் அந்த எண்ணுக்கே கொடுத்துவிடுவார்கள்.

இந்த விஷயம் நமக்கு தெரியாமல் இருப்பதற்காக நமக்கு பல முறை போன் செய்து போனை சுவிட்ச் ஆப் செய்ய வைப்பர். பின்பு அந்த சிம் உடன் இணைக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து விடுவர்.

சந்தேகத்திற்குரிய நோடிஃபிகேஷன், தெரியாத நபரிடமிருந்து குறுஞ்செய்திகள், முன்னர் வைத்திருந்த வங்கி கணக்குகளின் கடவு சொற்கள் தானாகவே செயலிழப்பது போன்ற சூழலைக் கொண்டு நமது சிம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதை அறிந்து கொள்ளலாம்.