வீட்டில் இருக்க வேண்டிய உயிர் காக்கும் திரவம்!
வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பைத் தடுத்து, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும், ஓ.ஆர்.எஸ்., எனப்படும் ஓரல் ரீ ஹைட்ரேஷன் கரைசல், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய திரவம்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர், உப்பு, குளூக்கோஸ் மற்றும் சுத்தமான தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் ஓ.ஆர்.எஸ்., கரைசலை கண்டுபிடித்தார்.
இதன்மூலம், நீரிழப்பினால் குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்க முடியும் என்று நிரூபித்தார்.
இன்று உலகம் முழுதும் கோடிக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதில், உலக சுகாதார மையம் பரிந்துரைக்கும் ஓ.ஆர்.எஸ்., முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வளவு பயனுள்ள ஓ.ஆர்.எஸ்., குறித்து, பொதுமக்கள் அதிகம் தெரியவில்லை என டாக்டகள் கூறுகின்றனர்.
குழந்தைக்கு நீரிழப்பு ஏற்பட்ட பிறகுதான், ஓ.ஆர்.எஸ்., கரைசல் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதாக கூறப்படுகிறது.
உண்மையில், வயிற்றுப்போக்கு, வாந்தி ஆரம்பித்த உடனேயே ஓ.ஆர்.ஏஸ்., கொடுக்கத் தொடங்க வேண்டும்.
அதுவே நீரிழப்பைத் தடுக்கவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலையைத் தவிர்க்கவும் உதவும் என கூறப்படுகிறது.