தமிழகத்தில் அனல் காற்று 111 டிகிரி தாண்டும் - எச்சரிக்கும் வானிலை நிலையம்!

தமிழகம், புதுச்சேரி உட்பட ஒன்பது மாநிலங்களுக்கு, அனல் காற்று அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 111 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் தாண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் நேற்று, 18 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 44.3 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது.

இது தொடர்பான, 'ஆரஞ்சு அலெர்ட்' ஜார்க்கண்ட், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம், பீஹார், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல், 6ம் தேதி வரை, தமிழக உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது.

வடக்கு உள் மாவட்டங்களில், 111 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 44 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்ப நிலை பதிவாகலாம்.

தமிழகத்தில் வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, காஞ்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களில், வெப்ப அலை அபாயத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சம், 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வெயில் கொளுத்தும் நேரத்தில், பகலில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், அடிக்கடி குடிநீர் அருந்துமாறும், நீர்ச்சத்து மிக்க பானங்களை உட்கொள்ளுமாறும், வெயிலில் செல்வதை தவிர்க்கும்படியும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.