நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பர் என்ற எண்ணத்தை மாற்றுவது எப்படி?

மன அழுத்தத்துக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பர் என்ற எண்ணம். உலகில் பலருக்கும் இதே பிரச்னை உள்ளது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

சிலருக்கு மன முதிர்ச்சி பதின்பருவத்திலேயே வரும்; ஒருசிலருக்கு 30 வயதுக்குமேல் வந்துவிடும். ஆனால் சிலருக்கோ 50 வயது வரை வரவே வராது. இது அவரவர் வளரும் சூழல் பொருத்து அமையும்.

நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற எண்ணவோட்டத்தைத் தடுக்க சில வழிகள் உள்ளன. இவற்றை சரிவர பின்பற்றினால் இளவயதிலேயே இதிலிருந்து மீண்டுவிடலாம். அதன்படி...

அடிக்கடி மன்னிப்பு கேட்காதீர்... பெரிய தவறு செய்தால் மன்னிப்பு கேட்கலாமே தவிர, உங்கள் இயல்பான விஷயம் பிறருக்கு தொந்தரவாக இருந்தால் அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருக்காதீர்.

உங்களை உணருங்கள்... நீங்கள் யார், எதற்காகப் பிறந்தீர்கள், எந்த லட்சியத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பிறரை திருப்திப்படுத்த நினைக்காதீர்... ஒரு செயல் செய்வதன் மூலம் மற்றவரது கவனத்தை ஈர்க்க நினைத்து செயலைச் செய்யாதீர். உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள்.

முடியாது என அழுத்திக் கூறுங்கள்... உங்களால் செய்ய முடிந்த செயலை மட்டும் செய்யுங்கள். இல்லாவிட்டால் முடியாது என தெளிவாக கூறும்போது, உங்களுக்கு மட்டுமின்றி அவருக்கும் நன்மை உண்டாகும்.

ஊக்கப்படுத்துவோர் மத்தியில் இருங்கள்... உங்களின் பணியை மதித்து ஊக்கப்படுத்துபவர்களுடன் பழகுவது நல்லது. மன உறுதியை குலைக்கும் நபரின் அருகில் செல்வதைத் தவிருங்கள்.

பிறர் வளர்ச்சியில் பொறாமை கூடாது... மன நிம்மதி கெட முக்கியக் காரணம் இது. உங்களின் வேலையை மட்டும் பார்க்கும் வரை நிம்மதி கெடாது. பிறரை பார்த்து பொறாமைப்பட்டால் நிம்மதி நிச்சயம் காலி.