இந்தியாவின் மீது பிற நாடுகளின் பார்வை எப்படி? ஆய்வு கூறுவதென்ன?

அமெரிக்காவை சேர்ந்த, 'பியூ' என்ற தன்னார்வ ஆய்வு நிறுவனம், நம் இந்திய நாட்டின் மீது பிற நாடுகளின் பார்வை, எவ்வாறு உள்ளது என ஆய்வு நடத்தியது.

அதில், கடந்த பிப்ரவரி - மே மாதம் வரை 42,000க்கும் மேற்பட்ட மக்களிடம், உலகின், 36 நாடுகளில் இந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், அண்டை நாடான இலங்கையில், 79 % பேர் சாதகமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக, பிரிட்டன், கென்யாவில் தலா 71 % பேரும், ஜெர்மனியில் 63 %, இத்தாலியில் 56 %, ஸ்வீடனில், 55 % நம் நாட்டின் மீது, சாதகமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இந்தியாவைப் பற்றி 42 % பேர் சாதகமான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். அதேபோல், 51 % எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

அந்நாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நம் நாடு அடைக்கலம் அளித்ததால், இந்த எதிர்ப்பு மனநிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானில், நம் நாட்டிற்கு எதிராக, 91 % பேர் எதிர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகின் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவில், நம் நாட்டைப் பற்றி, 45 % பேர் மட்டுமே சாதகமான கருத்தை தெரிவித்துள்ளனர். இது, 2023ல், 51 % ஆக இருந்தது.

ஒட்டுமொத்தமாக, 36 நாடுகளிலுள்ள மக்கள், நேர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்; இதில், 45 % சாதகமான பார்வையையும், 41 % எதிர்மறையான கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.