சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?

மருத்துவமனைகளின் நல்ல வலையமைப்பும், கிளெய்ம் சேவையில் நல்ல பெயரும் கொண்ட காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வது முக்கியம்.

குறிப்பிட்ட நிறுவனத்தை தேர்வு செய்வதைவிட, எப்படிப்பட்ட நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

நீங்கள் வசிக்கும் பகுதியில் பரவலான சேவை வலையமைப்பை கொண்ட நிறுவனத்தை தேர்வு செய்யவும்.

கிளைகள் மட்டுமின்றி, மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனங்கள், முகவர்கள், தரகர்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவை அமைப்புகளும் பரவலாக இருக்க வேண்டும்.

நிறுவனம் நிதி ரீதியாக வலுவானதாகவும், கிளெய்ம்களை சிறப்பாக தீர்த்து வைக்கும் நற்பெயர் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

கிளெய்ம், செட்டில்மென்ட் விகிதம் உள்ளிட்ட தகவல்களை, நிறுவனத்தின் இணையதளம் அல்லது காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கிளெய்ம்களை எவ்வளவு விரைவாக தீர்க்கிறது என்பதையும் கவனிக்கவும். நீண்ட காலமாக நிலுவையிலுள்ள கிளெய்ம்கள் குறைவாக இருப்பது, சாதகமான அறிகுறியாகும்.

மேலும், நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், உடன் பணியாற்றுவோர் ஆகியோரிடம் அவர்களின் காப்பீட்டு நிறுவன அனுபவத்தை கேட்டறியலாம்.

குறிப்பாக, பாலிசி வாங்கும்போது சரியான தகவல்கள் வழங்கப்பட்டனவா, கிளெய்ம் ஏற்பட்டபோது நிறுவனம் எவ்வாறு செயல்பட்டது என தெரிந்து கொள்வது முக்கியம்.

நம்பகமான முகவர் இருந்தால், அவர்களிடமும் பரிந்துரை பெறலாம். ஏற்கனவேயுள்ள நிறுவனத்தின் சேவை சிறப்பானதாக இருந்தால், அதே நிறுவனத்திடம் மற்றொரு பாலிசி எடுக்க பரிசீலிக்கலாம்.

அதேநேரத்தில், ஏற்கனவே ஒரு பாலிசி இருக்கும்போது, வேறு நிறுவனத்தை ஏன் தேடுகிறோமென யோசித்தாலே, புது நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும்போது, கவனிக்க வேண்டியவற்றை வழிகாட்டும்.